இலங்கையில் புகையிலை (Tobacco/Cigarettes) பயன்பாடு காரணமாக மாத்திரம் வருடமொன்றுக்கு 22,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அகால மரணம் அடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) எச்சரித்துள்ளது.
அத்துடன், புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக மனித உடலுக்கு 200க்கும் மேற்பட்ட கொடிய நோய்கள் ஏற்படுகின்றமை மருத்துவ ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை (World No Tobacco Day 2026) முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
புகையிலையினால் நாட்டுக்கு ஏற்படும் பாரிய பொருளாதார நஷ்டம் குறித்து வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
எமது சிறிய நாட்டிற்குள் புகையிலை நுகர்வு காரணமாக ஆண்டுக்கு 22,000 பேர் உயிரிழக்கின்றனர். இதன் பொருளாதார பாதிப்பைப் பார்த்தால், கடந்த 2016ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 214 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது.
இந்தத் தொகையானது கொழும்பிலுள்ள ஒரு ‘தாமரைக் கோபுரம்’ (Lotus Tower) போன்ற 16 கோபுரங்களை புதிதாகக் கட்டுவதற்கும், அல்லது இரண்டு பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளை (Highways) முழுமையாக அமைப்பதற்கும் சமமான பிரம்மாண்ட தொகையாகும்.”
சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாரிய அழிவுகள் குறித்தும் இந்த ஊடக சந்திப்பில் விசேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையில் மாத்திரம் நாளாந்தம் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுமார் 9 மில்லியன் முதல் 11 மில்லியன் வரையான சிகரெட் துண்டுகள் (Cigarette Filters) பொதுவெளியில் உதிர்ந்து சுற்றுச்சூழலில் கலக்கவிடப்படுகின்றன.
இவ்வாறு வீசப்படும் சிகரெட் பில்டர்களில் மனித உடலுக்கும் மண்ணுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு இரசாயனங்களும், புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகளும் (Carcinogens) அடங்கியுள்ளன.
இதனால் நிலத்திற்கும், நிலத்தடி நீருக்கும் மற்றும் பொது சுகாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாதவை, என விசேட வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.