நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள், வீதியோர கடைகள் ஆகியவற்றில் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டுதலின் கீழ், வீதியோர கடைகள், உணவகங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம், உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை, சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர, மனித பாவனைக்கு உதவாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


