பிரபல பாடகர் Sir Tom Jones-ஐ ITV-யின் The Voice UK நிகழ்ச்சிக்கு மீண்டும் முழுநேர பயிற்சியாளராக அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாடகரும் இசையமைப்பாளருமான Will.i.am ஆதரவு தெரிவித்துள்ளார். Tom Jones நிகழ்ச்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் இணைக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் ஆரம்பித்துள்ள மனுவை Will.i.am தனது Instagram பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
86 வயதான Sir Tom Jones, 2012ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இடைக்கிடையே பயிற்சியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரை மீண்டும் நிகழ்ச்சியில் இணைக்க வேண்டும் என்ற மனுவை Kingston-upon-Hull பகுதியைச் சேர்ந்த Aaron Howlett என்பவர் ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கு உலகம் முழுவதும் 63,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனிடையே, The Voice UK நிகழ்ச்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தொடர் 15இல் Tom Jones இனி முழுநேர பயிற்சியாளராக இருக்கமாட்டார் என்றும், அடுத்த தொடரில் அவர் பங்கேற்பது தொடர்பாக அவருடனும் அவரது குழுவினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITV வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2027ஆம் ஆண்டு ஒளிபரப்பாகவுள்ள The Voice UK தொடரில் Will.i.am, Kelly Rowland, Aitch மற்றும் Cheryl ஆகியோர் பயிற்சியாளர்களாக இடம்பெறவுள்ளனர். அதேவேளை, பல ஆண்டுகளாக நிகழ்ச்சியில் பங்கேற்ற Tom Jones-க்கு ITV நன்றி தெரிவித்துள்ளது.









