இலங்கை ரூபாயின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், ரூபாயின் மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் ரூபாய் வேகமாக வீழ்ச்சியடைந்து, பின்னர் மீண்டும் வலுவடைந்தமை தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை மத்திய வங்கி மே மாதத்தில் சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைக்கு வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, சந்தையில் இருந்த ரூபாய் விநியோகத்தை மத்திய வங்கி மீண்டும் தன்வசப்படுத்தியமை, ரூபாய் வலுவடைவதற்கு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புடன் உள்நாட்டு சந்தையில் டொலருக்கான தேவையும் அதிகரிப்பதால், எரிபொருள் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப திருத்தம் செய்வது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மூன்றாம் தரப்பு ஒன்றின் கைக்குச் சென்றுள்ள 2.5 மில்லியன் டொலர் தொகையை மீண்டும் மீட்க முடியாமல் போனால், அந்த நிதிச் சுமையை இறுதியாக பொதுமக்களே வரிகள் மூலம் சுமக்க நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.