கல்முனையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக, இலங்கை இராணுவத்தின் கல்முனையில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பௌர்ணமி தினமன்று மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை வரை இடம்பெற்றதுடன் சுமார் 100 க்கும் அதிகமான இராணுவத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பல்வேறு அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலைகளில் உள்ள இரத்த வங்கிகளில் இரத்த தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதற்கமைய இவ்விரத்ததான முகாமை கல்முனைப் பிராந்திய இராணுவ கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் தர்சன சிறிசேன ஆலோசனைக்கமைய கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் குறித்த இரத்ததான முகாமை ஏற்பாடு ஏற்பாடு செய்திருந்தனர்.

உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம் எனும் தொனிப் பொருளில் கல்முனைப் பிராந்திய இராணுவ அலுவலக அதிகாரிகள் பாதுகாப்பு படை வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.