Anthropic நிறுவனத்தின் Claude செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி, CRISPR மரபணு திருத்த தொழில்நுட்பத்தை ஒத்த பண்புகளைக் கொண்ட இதுவரை அடையாளம் காணப்படாத புதிய நொதி அமைப்பை கண்டுபிடித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களான bacteriophages-இன் DNA-வில் கண்டறியப்பட்டுள்ளது.
Anthropic இந்த புதிய அமைப்புக்கு Array-associated Reverse Transcriptases (ART) என பெயரிட்டுள்ளது. RNA-வை DNA-வாக மாற்றும் reverse transcriptase என்ற நொதியுடன், அதனுடன் தொடர்புடைய மற்றொரு புரதமும், CRISPR அமைப்பை நினைவூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் காணப்படும் DNA வரிசைகளும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியமான செயல்பாடு தற்போது வரை கண்டறியப்படவில்லை.
மிகப்பெரிய DNA தரவுத்தளத்தில் சுமார் 21 மணி நேரம் Claude மாதிரியின் ஏராளமான AI முகவர்கள் தேடலை மேற்கொண்ட பின்னர் இந்த அமைப்பு கண்டறியப்பட்டதாக Anthropic தெரிவித்துள்ளது. சுமார் 950 Claude முகவர்கள் இணைந்து 210 மில்லியனுக்கும் அதிகமான tokens-ஐ பயன்படுத்தி DNA வரிசைகளை ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் புதிய மரபணு திருத்த தொழில்நுட்பமாக பயன்படுத்தப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதன் உயிரியல் செயல்பாடு மற்றும் சாத்தியமான மருத்துவ அல்லது உயிரித் தொழில்நுட்ப பயன்பாடுகளை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் மற்றும் சுயாதீன அறிவியல் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. Anthropic வெளியிட்ட ஆய்வு தற்போது முன்வெளியீடு (preprint) வடிவிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









