டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியில் டிக்கோயா பட்டல்கல தோட்டப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
