இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாகவும், இதற்கு இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடே பிரதான காரணம் என்றும் வாய் சுகாதார விசேட மருத்துவர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘5 ஆவது தேசிய வாய் சுகாதார ஆய்வு’ குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஒரு நபர் ஆண்டுக்கு 10 கிலோ சீனியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒரு இலங்கையர் சராசரியாக ஆண்டுக்கு 34 கிலோ சீனியைப் பயன்படுத்துகிறார். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகமாகும்.
இலங்கையில் 50 வீதமான பெரியவர்கள் ஈறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனி கலந்த தின்பண்டங்கள், இனிப்பு பானங்கள் மற்றும் தேநீரில் அதிகளவு சீனி சேர்ப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஐந்து வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகளிடையே பற்சிதைவு 63 வீதமாகக் காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலையளிப்பதாக வைத்தியர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பற்பசைகளின் விலை அதிகரித்ததால், மக்கள் மீண்டும் பற்பொடிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பற்பொடியில் உள்ள சொரசொரப்பான தன்மை பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஊறுவிளைவிக்கும் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் கடைசியாக 2015-2016 இல் இந்த ஆய்வு நடைபெற்றது.
அதன்படி, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் 10 முதல் நவம்பர் மாதம் வரை நாடு தழுவிய ரீதியில் தரவுகள் சேகரிக்கப்பட்டு இந்த 05 ஆவது தேசிய ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
1982-83 இல் முதலாவது ஆய்வு நடத்தப்பட்ட போது 12 வயது சிறுவர்களின் பற்சிதைவு 70 வீதமாக இருந்தது, கடந்த ஆய்வில் அது 30 வீதமாகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பற்களின் பாதுகாப்பு கருதி 75 வீதத்துக்கும் அதிகமானோர் ‘புளோரைட்’ கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான விடயம் என்றும், அந்தப் பழக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.