கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு : களுத்துறையிலும் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் இன்று சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் தகவலின்படி , குறித்த பகுதியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலைய வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இன்று நடந்த மற்றுமொரு சம்பவத்தில், களுத்துறையின் வடக்கு மதிய மங்கட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 32 வயது நபர் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.