
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி கைது
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்திலிருந்து டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ஒரு பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.
25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.
பேரணியில் பயணித்துக் கொண்டிருந்த எம்.பி.க்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சில எம்.பி.க்கள் பொலிஸ் தடுப்புகளைத் தாண்டி குதித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி, ஜோதிமணி எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவா மற்றும் அவருடன் இருந்த பிற எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
