ஸ்வீடனில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இடதுசாரி மற்றும் வலதுசாரி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய கன்சர்வேடிவ் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மீண்டும் ஆட்சியமைத்தால், அவருக்கு ஆதரவளித்து வரும் தீவிர வலதுசாரியான ஸ்வீடன் ஜனநாயகக் கட்சிக்கு (SD) அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் மக்டலேனா ஆண்டர்சனை மீண்டும் பிரதமராக ஆதரிக்கும் இடதுசாரிக் கூட்டணி சற்றே முன்னிலையில் உள்ளது. Ekot நிறுவனத்தின் வெள்ளிக்கிழமை கருத்துக்கணிப்பில் இடதுசாரிக் கூட்டணிக்கு 50.8% ஆதரவும், வலதுசாரிக் கூட்டணிக்கு 47.6% ஆதரவும் கிடைத்துள்ளன. சமூக ஜனநாயகக் கட்சி 28.6% ஆதரவுடன் முன்னிலையில் உள்ள நிலையில், ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி 18.3% ஆதரவுடன் உள்ளது.
தேசிய பாதுகாப்பு, கும்பல் குற்றங்கள், நலத்திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் குடியேற்றக் கொள்கை ஆகியவை தேர்தலில் முக்கிய விவகாரங்களாக உள்ளன. குறிப்பாக குடியேற்ற எதிர்ப்பு கொள்கையை வலியுறுத்தும் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தில் நேரடியாக இணைவது தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1980களில் நாசி ஆதரவாளர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி, நீண்ட காலமாக பிரதான அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் 2022 தேர்தலில் அக்கட்சி இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதன்பின்னர் தற்போதைய மத்திய-வலதுசாரி அரசாங்கத்திற்கு வெளிப்புற ஆதரவு வழங்கி வருகிறது. குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குதல் மற்றும் நாடுகடத்தல்களை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அக்கட்சி ஆதரவளித்துள்ளது.
எனினும், இதுவரை ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சராக பதவி வகித்ததில்லை. தற்போது அக்கட்சிக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என்ற பிரதமரின் நிலைப்பாடு, அந்தக் கட்சியை ஸ்வீடன் அரசியலின் பிரதான நீரோட்டத்துக்குள் மேலும் கொண்டு வரும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவான தகவல்களைப் பரப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அந்த அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பிரதமர் கிறிஸ்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனில் 80 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தேர்தல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கட்கிழமையும் தொடரும்.











