ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்புடைய தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் தக்கவைத்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானத்துக்கு இணங்கியது என்ற வகையில் பணிப்பாளர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்தின் இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிதிப் பாய்ச்சல் முகாமை மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையை, இழப்பு அல்லாத நிறுவனமாகக் கட்டியெழுப்ப, தொடர்புடைய அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டுத் தலையீடு இல்லாமல் ஸ்ரீலங்கன் விமான சேவையைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை அதன் இயக்கச் செலவுகளுக்கு திறைசேரியிலிருந்து நிதியைப் பெறாத சூழலில், நிறுவனத்திற்குள்ளேயே அந்த நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.