-கிண்ணியா நிருபர்-
வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து, நேற்று திங்கட்கிழமை மாலை, திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கோயில் நிலங்களை அபகரிக்காதே, பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே, அரசே சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்து, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்கு நாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை, என தொடர்ச்சியாக நடைபெறும் அநீதிகளை கண்டித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




