வடக்கு, கிழக்கில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது .

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யலாம்.

இதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.