தாய்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஒன்றின் நிதியில் சுமார் 100 மில்லியன் தாய் பாட் (சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்) மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் புத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயுத்தயாவில் உள்ள 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாட் புத்தாய்சவான்(Wat Phutthaisawan) கோயிலின் முன்னாள் தலைமை பிக்குவான 66 வயதுடைய Phra Wachirayan Wi என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் புனரமைப்பு மற்றும் புனிதப் பொருட்கள் தொடர்பாக பெறப்பட்ட நன்கொடைகள் உட்பட, இரண்டு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பணத்தை கோயில் கணக்கில் செலுத்தாமல் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 100 மில்லியன் பாட் மதிப்புக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலில் பணியாற்றிய 47 வயதுடைய பெண்ணொருவரும் இந்த நிதி மோசடிக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்குகள் ஊடாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பாட் பணம் பரிமாறப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த பிக்கு துறவற ஆடையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பணமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு அல்லது மூன்று பேர் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.











