மத்திய மெக்சிகோவின் தெமஸ்கல்சிங்கோ நகராட்சியில் உள்ள சாந்தா மரியா கான்செஸ்டா கிராமத்தில், “நுயெஸ்ட்ரா செனோரா டி லா லுஸ்” (ஒளியின் தேவமாதா) தேவாலயத்திற்கு அருகில் சனிக்கிழமை இரவு நடந்த பாரம்பரிய திருவிழாவின்போது வெடிமருந்து பொருட்கள் வெடித்து, சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.
மெக்சிகோ சிட்டியிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த, 66,000 மக்கள்தொகை கொண்ட இப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் வெடிமருந்து காட்சியை பார்க்க கூடியிருந்தனர்.
வைக்கோலால் செய்யப்பட்ட காளை உருவம் (bull effigy) மீது வெடிமருந்துகளை பொருத்தி எரிக்கும் பாரம்பரிய சடங்கின்போது, அது தேவாலயத்தில் சேமிக்கப்பட்டிருந்த பெரிய வெடிமருந்து இருப்பையும் தீப்பற்ற வைத்ததாக நம்பப்படுகிறது.
வெடிப்பின் தாக்கத்தால் நகர சதுக்கத்திலும் தீ பரவியது; சிலர் இடிந்து விழுந்த குப்பையின் கீழ் சிக்கியிருந்தனர்.
காயமடைந்தோரில் 2 பாதிரியார்களும் அடங்குவர்; காயங்களில் தீக்காயங்கள் (1,2,3 டிகிரி), தலைக்காயங்கள், பல் காயங்கள் என பலவகை அடங்கும்.
வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை; மெக்சிகோ மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
“உயிரிழந்தோர், அவர்களது குடும்பத்தினர், காயமடைந்தோர் அனைவருக்காகவும் நாங்கள் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்கிறோம்” என அருகிலுள்ள அத்லகோமுல்கோ மறைமாவட்டம் அறிக்கை.
மெக்சிகோவில் தெருக் கொண்டாட்டங்கள், மத விழாக்களில் வெடிமருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற விபத்துகள் அரிதானவை அல்ல; சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் ஹிடல்கோ மாநிலத்தில் இதேபோன்ற வெடிப்பில் 17 பேர் காயமடைந்திருந்தனர்.










