பிரான்ஸின் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரம், இந்து மத அமைப்பைச் சேர்ந்த குழுவொன்றின் தனிப்பட்ட வருகையின்போது பெண் ஊழியர்கள் பணியிடங்களில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஊழியர்களின் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது.
சுமார் 100 பேர் கொண்ட BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) குழு கடந்த சனிக்கிழமை ஈஃபில் கோபுரத்துக்கு தனிப்பட்ட முறையில் சென்றிருந்தது. அப்போது, குழுவினருடனான பெண்களின் தொடர்பை குறைக்கும் வகையில் பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் அவர்கள் ஆண் ஊழியர்களால் மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெண்களை அவர்களின் பாலினத்தின் அடிப்படையில் ஒதுக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தனர். இதையடுத்து திங்களன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈஃபில் கோபுரத்தின் திறப்பு தாமதமானது.
ஈஃபில் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனம், பெண்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதை உறுதி செய்ததுடன், அத்தகைய நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றும், அது நிறுவனத்தின் மதிப்புகளுக்கும் ஆண்–பெண் சமத்துவக் கொள்கைக்கும் முரணானது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், BAPS அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், யாருக்கும் ஈஃபில் கோபுரத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்படவில்லை என்றும், குழுவின் பெரிய எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாரிஸ் நகர நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிரான்ஸில் பெண்களின் சமத்துவமும் பொதுவாழ்வில் அவர்களின் முழுமையான பங்கேற்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.











