மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் (75 mm) அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.
சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை வேளையில் கடும் பனிமூட்டமான நிலை காணப்படும்.
மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக வீதிப் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்பதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
