செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பல்வேறு வாய்ப்புகள் உருவாகின்ற போதிலும், அதனைப் பொறுப்புடன் பயன்படுத்துவதுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய ஆபத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவானது கல்வியை மேம்படுத்தவும், ஆராய்ச்சிகளை வலுப்படுத்தவும், பொதுச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கவும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தவறான தகவல்கள், பாரபட்சமான முடிவுகள், தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் காணப்படும் சமத்துவமின்மை போன்ற சவால்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மனிதர்களின் தீர்மானிக்கும் திறன், பொறுப்புக்கூறல் மற்றும் பொதுநலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், டிஜிட்டல் அறிவாற்றலை வலுப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்ற கொழும்புப் பல்கலைக்கழக சர்வதேச மாநாடு 2026 நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாடு, ‘செயற்கை நுண்ணறிவு, நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை முன்னெடுத்தல்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அறிவை உருவாக்குதல், விமர்சனச் சிந்தனையை வளர்த்தல் மற்றும் தேசிய சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளார்.
தரமான கல்வியைச் சமமாகப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவது நாட்டின் அடிப்படைப் பொறுப்பு எனவும், அபிவிருத்தியின் நன்மைகள் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புத்தாக்கம் பொதுநலனுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றும், ஆராய்ச்சிகள் தேசிய முன்னுரிமைகளுக்குப் பங்களிக்க வேண்டும் என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உருவாகும் வாய்ப்புகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலக்குகளை அடைவதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பும், கூட்டு பொறுப்புணர்வும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மஹேஷ் கருணாதிலக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










