சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் கிடைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரண்டு சொத்துக்களை முடக்குவதற்கு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு சொத்துக்களும் இரு சந்தேகநபர்களுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கிப்படுகின்றது.
எம்பிலிபிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எம்பிலிபிட்டிய, கவந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள முதலாவது சொத்து, சுமார் ஒரு ஏக்கர் காணியையும், இரண்டு மாடி வீடொன்றையும் கொண்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய, நியூ டவுன், பிம்பதுயாய பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது சொத்து, 23.7 பேர்ச் காணியையும், இரண்டு மாடி வீடொன்றையும் கொண்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் வகையில், செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சொத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










