இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “மிகுந்த வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
“டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள்காட்டி பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
75 படுக்கைகள் கொண்ட பணம் செலுத்தும் விருந்தினர் தங்குமிடமாக (PG accommodation) பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டிடம் பிற்பகல் சுமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை 1.30 மணியளவில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தின் உரிமையாளர் குருகிராமில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் சத்ய நிகேதன் அமைந்துள்ளதுடன், இப்பகுதியில் அதிகளவான மாணவர்கள் வசித்து வருகின்றனர்.
“உள்ளூர் விசாரணையில், இந்தக் கட்டிடம் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது என்பதும், கீழ்தளம் மற்றும் அதற்கு மேல் ஐந்து மாடிகளைக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது PG தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. சம்பவம் இடம்பெற்றபோது கீழ்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் இடம்பெற்று வந்தன” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), டெல்லி தீயணைப்புப் பிரிவு மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஆகியவற்றின் குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் CATS அவசர மருத்துவ ஊர்திகளுடன் சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.










