புதிய வகை கையடக்கத் தொலைபேசி என நினைத்து நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருட்டு

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் புதிய வகை கையடக்கத் தொலைபேசி என நினைத்து நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

71 வயதுடைய குறித்த மூதாட்டி 2000 ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி வீட்டிற்குச் செல்ல இ.போ.ச பேருந்தில் ஏறியுள்ளார். அங்கே ஒரு இருக்கையில் நடத்துனரின் டிக்கெட் அச்சிட்டு கொடுக்கும் இயந்திரம் கிடப்பதை அவதானித்துள்ளார்.

அந்நேரம் பேருந்தில் சில பயணிகளே இருந்துள்ளனர் உடனே அவர் அந்த இயந்திரத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டுள்ளார்.

பின்னர் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்த எண்களை அழுத்தியதாகவும் அழைப்புகளுக்கு பதிலாக பஸ் டிக்கெட்டுகள் இயந்திரத்திலிருந்து அச்சிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் இது தொலைபேசியல்ல பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்த குறித்த மூதாட்டி காலி பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரி ஒருவரிடம் உரிய பயணச்சீட்டு இயந்திரத்தை கையளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பயணச்சீட்டு இயந்திரத்தை காணவில்லை என தேடிய நிலையில் இமதுவ பொலிஸார் குறித்த மூதாட்டியை கைது செய்து காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்