பண்டாரவளை தியத்தலாவ சாலை பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

-பதுளை நிருபர்-

பண்டாரவளை தியத்தலாவ வீதி இலக்கம் 186/2 சாலையில் இயங்கும் பேருந்துகள் தியத்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தியத்தலாவை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நுழையும் மற்றும் வெளியேறும் பாதையை மாற்றியமைக்க தியத்தலாவை பொலிஸாரினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அவர்களும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் அறிவுறுத்தல்களை பின்பற்றினால் பிரச்சினைகளும் ஏற்படும் என பேருந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களுடைய கோரிக்கையை ஏற்கும் வரையில் குறித்த சாலையில் பயணிக்கும் 27 தனியார் பேருந்துகளை நிறுத்தி வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தியத்தலாவை பொலிஸ் நிலையத்திடம் வினவிய போது, ​​தியத்தலாவை நகரின் மத்தியில் பல பேருந்து சாரதிகள் பெருந்துகளை நிறுத்துவதாகவும் முறையாக பேருந்து தரிப்பிடத்திற்குள் பெலுந்துகளை நிறுத்துவதில்லை எனவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கையில், பொலிஸார் மற்றும் பேருந்து சாரதிகள் ஆகிய இருதரப்பிலும் நியாயம் இருக்கிறது எனினும் இதனால் பொதுமக்கள் தான் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என தெரிவிக்கின்றனர்.

எனவே பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்து உடன்படிக்கை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்