நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான பரிந்துரை கையளிப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த யோசனைகள் தனி நபர் பிரேரணையாக இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் (பாராளுமன்ற்தில்) கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20ஆவது திருத்தம் உள்ளிட்ட பல அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இந்த பிரேரணையின் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தி அத்தியாவசிய அல்லது விசேட காரணங்களின் அடிப்படையில், மிக விரைவில் இதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த பிரேரணை சஜித் பிரேமதாஸவினால் கையளிக்கப்படாமைக்கு காரணம், பாராளுமன்ற நிலையியற்கட்டளை 24 (03) இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவருக்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்க முடியாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறித்த பிரேரணையின் முக்கிய சில விடயங்கள் வருமாறு:

தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல்: ஜனாதிபதியை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும்.
அமைச்சரவை பொறுப்புக்கூறும் அங்கமாக இருக்கும் என்பதுடன். பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருக்கும். அமைச்சரவை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்படலாம்.
உச்சபட்ச அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 25, அமைச்சரவை அல்லாத அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 25.
கட்சி மாறுபவர்களுக்கு அமைச்சு பொறுப்பை ஏற்க முடியாது.