பொரளை லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் அருகில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த, அடையாளம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
களனியை சேர்ந்த இந்துருகொல்ல விதான ஆரச்சிகே (வயது-53) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அலுவலக சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற மேஜர் துவான் நிஷாம் முத்தாலிப் கொலைச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சுமார் 05 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.