திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தக் கோரிக்கை

திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தக் கோரியும், ஆலய வளாகத்தினுள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றக் கோரியும் மூதூர் பிரதேச சபையில் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் அமர்வு இன்று காலை இடம்பெற்றபோது உப தவிசாளர் சி.துரைநாயகத்தினால்; தனிநபர் பிரேரணையை முன் வைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும், இந்து சமயத்தின் அடையாளச் சின்னங்களையும் கொண்டுள்ள திருக்கோணேஸ்வர ஆலயமும், அதனைச் சூழவுள்ள இயற்கை வளங்களும் இலங்கையின் மிகப்பெரிய பொக்கிஷங்களாகும். இவற்றை அதன் பாரம்பரியத்தோடும், எழிலோடும் இயல்பாகவே பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் அளவீட்டுக்கு அமைய திருக்கோணேஸ்வர ஆலயத்தைச்சூழ 18 ஏக்கர் 1 ரூட் 29 பேச்சர்ஸ் காணியும், பாபநாச தீர்த்தக் கிணற்றைச்சூழ 3 ஏக்கர் 2 ரூட் 1 பேர்ச் காணியும், கோட்டை வாசலின் முன்னால் உள்ள எல்லைப் பிள்ளையார் கோவிலைச் சூழ 26 பேர்ச்சஸ் காணியுமாக திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குரிய காணிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருக்கோணேஸ்வர ஆலய வளாகம் இந்துக்களின் தொல்பொருட்கள் நிறைந்த இடமாக இருப்பதனால் தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியலுக்குரிய இடமாக இவ் ஆலய வளாகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தினுள் சட்டத்துக்கு முரணாக, அத்துமீறிய கடைகளும், கட்டுமானங்களும், மனித நடமாட்டங்களும் ஆலயத்தின் புனிதத்தை பாதிக்கும் விதமாகவும், ஆலய வளாகத்தைச் சூழவுள்ள இயற்கை வளங்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இன்றுவரை இருந்து வருகின்றன.

இதே நிலைமை தொடருமானால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது திருக்கோணேஸ்வரத்திற்கு உரித்தான இயற்கை வளங்களையும், வனவிலங்குகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

திருக்கோணமலையின் இயற்கை வளமும், திருக்கோணேஸ்வரர் ஆலயமும் உலகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவருகின்றவையாக இருக்கின்றன. இவற்றின் ஊடாகவும் பெருமளவான அன்னியச் செலாவணியை எமது நாடு ஈட்டி வருகின்றது. இதனால் இந்துசமய விழுமியங்களை பாதிக்காத வகையில் ஆலயத்தின்பால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாகவும், பாரம்பரிய அம்சங்களை பாதுகாக்கும் விதமாகவும் ஆலயத்தில் புணரமைப்புப் பணிகளைச் செய்கின்ற ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதோடு ஆலய வளாகத்தில் அத்துமீறி, சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் என்பவற்றை உடனடியாக அகற்றி ஆலயத்தின் எல்லைக்கு அப்பால் சட்ட ரீதியாகவும், நியாயமான முறையிலும் அவற்றுக்கான பதில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் இச் சபையின் ஊடாக தொல்லியல் திணைக்களம் உட்பட அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.