தினேஷின் மரணம் : கொலையா ? அல்லது கொலை மிரட்டல் முயற்சி தவறாகப் போய்விட்டதா ?

சுவிட்சர்லாந்திலிருந்து  -ச.சந்திரபிரகாஷ்-

கொழும்பைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் , ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணப்பாளரும் , மூன்று பிள்ளைகளின் தந்தையான தினேஷ் ஷாஃப்டரின் (வயது-51) கொலைச் சம்பவம் பல்வேறு விதமான சந்தேகங்களையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவமானது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா ? அல்லது இது ஒரு கொலை மிரட்டல் முயற்சி தவறாகப் போய்விட்டதா? என்பது விசாரணைகள் மூலம்தான் தெரியவரும்.  இருந்தும் சந்தேக நபர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை.

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்  அரைகுறை உயிருடன் இவரை காரில் விட்டுச் சென்ற மார்மம் என்ன ? இவருடன் இடைவழியில் ஏறிய அடையாளம் தெரியாத ஒருவர் இவரை மயானத்திற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றாரா ? என்ற பலகோணங்களில் விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவின் தகவல்படி, ஷாஃப்டர் ,  முன்னாள் கிரிக்கெட் ஆங்கில வர்ணனையாளர் பிரையன் தோமஸ் ஆகியோருடனான நிதி தொடர்புக்கும் மரணத்திற்கும், ஏதேனும் தொடர்புகள் உள்ளதா ? என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒப்பந்தத்தின் பேரில் திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் தினேஷின் மனைவி தனது கணவனுடைய கையடக்க தொலைபேசிக்கு பலதடவைகள் அழைப்பை ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்காத நிலையில் , ஜிபிஎஸ் மூலம் இறுதியில் பொரளை பொது மயானத்தில் இவர் இருப்பது தெரியவந்துள்ளது , இது தொடர்பாக நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியருக்கு மனைவியால் தகவல் வழங்கப்பட்டது.

 

இதையடுத்து வியாழன் மாலை உடனடியாக குறித்த பகுதிக்கு ஊழியர் சென்ற போது , காரின் முன்பகுதி இருக்கையில் கைகள் பின்பக்கமாகவும் மற்றும் கழுத்து பகுதி கட்டப்பட்ட நிலையில் தினேஷ் உயிருடன் மீட்கப்பட்டு , அங்கிருந்த மயான ஊழியர் ஒருவரின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

பொரளை மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் உயிரிழப்பு

மூச்சுத்திணரலுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது கொலை முயற்சியில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் ஏற்பட்ட மரணம் என தெரிவித்திருந்த நிலையில் , பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டமையே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று 17 ஆம் திகதி சனிக்கிழமை வரை  இது தொடர்பில் 23 பேரிடம் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் புலனாய்வுப் பிரிவு , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் இரண்டு பொலிஸ் குழுக்களை உள்ளடக்கிய குழுவினர் இக்கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.

கொலை இடம்பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் மற்றும் 20 திற்கும் அதிகமான சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற மயானப்பகுதி மற்றும் கொலை இடம்பெற்ற அவருடைய கார் என்பவற்றில் இருந்து தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களையும் , கைரேகை பதிவுகளையும் எடுத்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று நடந்தது என்ன ?

கொலைச் சம்பவம் இடம்பெற்ற மயானத்திற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி , இதைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள தொலைபேசி பதிவுகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளின்படி, தினேஷ் ஷாஃப்டரின் கார் பண்ணை வீதியின் வாயில் வழியாக மயானத்திற்குள் உள்நுழைந்ததாக தெரியவந்துள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது சுடுகாடுகளுக்கு இடையே உள்ள வெறிச்சோடிய பகுதியான விமானப்படையினரின் நினைவிடம் அருகே கார் நிறுத்தப்பட்டிருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

 

 

இந்தநிலையில் வியாழன் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடையில் கொழும்பு மலர் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து தினேஷ்  கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1.43 பில்லியன் கடனாகப் பெற்ற பிரையன் தோமஸை சந்திக்கப் போவதாக வர்த்தகர் தனது செயலாளரிடம் தெரிவித்ததாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையுடன் பிரையன் தோமசுக்கு என்ன தொடர்பு…..?

தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் ஆங்கில வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் சுமார் 4 மணித்தியாளங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்கள் தங்களுடைய விசாரணைகளுக்காக  தோமஸ் பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை தம்வசப்படுத்தி இக்கொலைக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

தினேஷ் தன்னை சந்திக்கக் கோரி குறுஞ்செய்தி(SMS)  அனுப்பியதாகவும் எனினும், தோமஸ் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்எம்எஸ் மூலம் பதிலளித்திருந்தாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றும், குறித்த நேரத்தில் தோமஸ் தனது வீட்டில் இருந்துள்ளமை அவருடைய வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவு காட்கிகளை பார்வையிட்ட போது தெரியவந்துள்ளது.

மறைந்த தொழிலதிபரால் ஏற்கனவே பிரையன் தோமசுக்கு எதிராக சிஐடியில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.43 பில்லியன் கடன் காரணமான புகாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இவர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாஃப்டர் என்பவர் ….?

ஷாஃப்டர் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், இங்கிலாந்தில் உள்ள பட்டய மேலாண்மை கணக்காளர் நிறுவனத்தில் உறுப்பினராகவும், நிதித்துறையில் திறமையான தகுதிகளுடன் பட்டமும் பெற்றவராவார்.

மேலும் இலங்கையின் நிதிச் சந்தைகளில் நன்கு மதிக்கப்பட்ட பெயராக இருந்தார், மேலும் சந்தையில் நம்பகத்தன்மையைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் மரணிக்கும் வரை இருந்தார்.

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தியின் பணிப்பாளரும் , இவர் தலைமையிலான பல நிதி நிறுவனங்கள் இலங்கையில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளில் இயங்கி வந்தன.

“இந்த இக்கட்டான நேரத்தில் ஊடகங்களும் , பொதுமக்களும் எங்கள் உணர்வுகளுக்கும் தனியுரிமைக்கும் மதிப்பளித்து” , சரியான உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்குமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினேஷ் மிகச் சிறந்தவர் என்றும் எங்கள் குடும்பத்தின் இதயம் மற்றும் ஆன்மா என்றும் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைவாக குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் , திட்டமிட்ட குற்றம் மற்றும் மனிதப்படுகொலை தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.