அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய வெள்ளை மாளிகை உதவியாளர்களான நடாலி ஹார்ப், மார்கோ மார்ட்டின் மற்றும் சேம்பர்லெய்ன் ஹாரிஸ் ஆகியோருக்கு தலா 45,000 அமெரிக்க டொலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ நிதி வெளிப்படுத்தல் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணம் 2025ஆம் ஆண்டுக்கான “விடுமுறை காலப் பரிசு” என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவரும் ஆண்டுக்கு 150,000 டொலர் அரசாங்க சம்பளம் பெறுகின்ற நிலையில், இந்தப் பரிசுத் தொகை அவர்களின் வருடாந்த சம்பளத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.
மேலும், டிரம்பின் மற்றொரு நெருங்கிய உதவியாளரான வால்ட் நௌட்டாவுக்கு 20,000 டொலர் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு உதவியாளர்களுக்கும் வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகை 155,000 டொலராக உள்ளது.
வெள்ளை மாளிகை இந்தப் பணம் டிரம்பின் நீண்டகால கிறிஸ்துமஸ் பரிசு வழங்கும் நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றும், உதவியாளர்களின் அரசாங்கப் பணிகளுடன் தொடர்பற்ற தனிப்பட்ட பரிசுகள் என்பதால் அவை சட்டபூர்வமானவை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், முன்னாள் அரசாங்க நெறிமுறை அதிகாரிகள் சிலர், அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது நெறிமுறை மற்றும் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்புவதாக விமர்சித்துள்ளனர்.











