சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜனின் தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய முடியுமாயின், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலையிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான தலையீட்டை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவதற்கு சவூதி அரேபியா தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு தலையீட்டை அனோஜனின் விவகாரத்தில் மேற்கொள்ள முடியுமாயின், இலங்கையில் அதேபோன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கும் தலையிட முடியும் என நாமல் ராஜபக்ஷ வாதிட்டார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடாவிட்டால், அரசாங்கத்தின் தீர்மானத்தை அரசியல் நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.










