கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வலியுறுத்தியுள்ளது.
மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.
இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம், மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அதிகபட்சமாக 18 மாத சிறைத்தண்டனையே விதிக்க முடியும் என்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் விளக்கத்தையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் குற்றத்திற்காக ஞானசார தேரர் ஏற்கனவே 10 மாதங்களுக்கும் மேலாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, இதற்கு முன்னரும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததை ஐக்கிய தேசியக் கட்சி நினைவூட்டியுள்ளது.
மேலும், ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணி அல்லது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் பாரிய தவறுகள் எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, ஞானசார தேரரின் காவி உடையைக் களைய உத்தரவிட்டவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
எனவே, தற்போது நிலவி வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.









