இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் போட்டிகளின்போது சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய விளம்பரங்கள் தொடர்ந்து காட்சியளிப்பது குறித்து ஆய்வாளர் டொக்டர் சஞ்சன ஹட்டோட்டுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் காணொளித் தொகுப்புகளில் 1xபெட் விளம்பரம் சுமார் 14 நிமிடங்கள் காட்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஐந்து காணொளிகள் 629,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின் காணொளிகளையும் சேர்த்து கணக்கிட்டபோது, 1xபெட் விளம்பரம் சுமார் 25 நிமிடங்கள் காட்சியளித்துள்ளதாகவும், இந்த 10 காணொளிகளும் சுமார் 20 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாரிமேட்ச் ஸ்போர்ட்ஸ் மற்றும் பெட்பிரிக்ஸ்7 போன்ற விளம்பரங்களும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவை வெளிநாடுகளில் இயங்கும் இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மாற்றுப் பிராண்டுகளாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கான அணுகலை அதிகாரிகள் தடுத்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய விளம்பரங்கள் கிரிக்கெட் ஒளிபரப்புகள் மூலம் பெருமளவில் மக்களைச் சென்றடைவது சட்ட அமலாக்கத்தில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ஏற்கனவே, இலங்கை எல்லைக்குள் நடைபெறும் தனது போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










