சிறைச்சாலை உத்தியோகத்தரின் சீருடையை அணிந்து பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்ற கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொண்டுள்ளார். இதன்படி பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் மற்றுமொரு விசாரணை நடத்தப்பட்டது.

இது தவிர, தப்பிச் சென்று பிடிபட்ட கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும், கைதி தொடர்பான ஆவணங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையை கைதி அணிந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினால் கைதி மருதானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்