சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்

-கல்முனை நிருபர்-

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இருந்து ஆரம்பமான நடை பவணி மாளிகா வீதி ஊடாக சென்று கடற்கரைப் பிரதேசத்தை அடைந்ததுடன் அங்கு விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

அதில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ எல் எம் நியாஸ், பல் வைத்திய நிபுணர் டாக்டர் எம் ஐ எம் நௌசாட், பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பி எம் நஸ்ருதீன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ புஹாது உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இதன்போது தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு மேலாக இருமல் இருந்தால் காசநோய்க்காக பரிசோதித்துக் கொள்ளுமாறும், உடன் சளிப் பரிசோதனை செய்வதன் மூலம் காசநோயை இலகுவாக இனம்கண்டு ஆறு மாதங்களுக்கு உரிய சிகிச்சையை வழங்கி முற்றாகக் குணமாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.