கொலை குற்றவாளிக்கு பொறுப்பதிகாரி பதவியா : வெடித்தது போராட்டம்!

-யாழ் நிருபர்-

தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த 22ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதி, ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஒன்பதுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை விகாரை திறந்து வைக்கப்பட்டது, இருந்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்து வண்ணம் உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இனப்படுகொலை இராணுவத்திற்கு விகாரை ஒரு கேடா, இராணுவமே வெளியேறு, கொலை குற்றவாளிக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியா, காலை உடைப்பதுவும் தொலைபேசி களவெடுப்பதுவும் பொலிஸாரின் கடமையா, தையிட்டி எங்கள் சொத்து, இந்தமண் எங்களின் சொந்தமண், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு என கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராடினர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.