காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் காட்டுத்தீ மற்றும் கடுமையான வெப்ப அலைகள், உலகளவில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளையும் மக்களின் சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
காட்டுத்தீயிலிருந்து வெளியாகும் PM2.5 நுண்துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாகச் சென்று இரத்த ஓட்டத்திற்கும் சென்றடையக்கூடியதால், சுவாச மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், வெப்பநிலை அதிகரிப்பு, காற்று தேங்குதல் மற்றும் அதிக சூரிய ஒளி ஆகியவை தரைமட்ட ஓசோன் மாசுபாட்டை அதிகரிக்கின்றன. இதனால் முன்கூட்டிய மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என WMO தெரிவித்துள்ளது.
1990களுடன் ஒப்பிடுகையில் தீயிலிருந்து உருவாகும் கடுமையான புகை மாசு நிகழ்வுகள் உலகளவில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக WMO அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2010 முதல் 2018 வரையிலான காலத்தில் இத்தகைய தீ–புகை நிகழ்வுகள் ஆண்டுதோறும் சுமார் 1 இலட்சம் கூடுதல் உயிரிழப்புகளுடன் தொடர்புடையதாக ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தை தனித்தனியாக அணுகாமல், ஒருங்கிணைந்த கொள்கைகள் மூலம் இரண்டையும் எதிர்கொள்ள வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.










