உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் இன்றைய தினம், உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
‘முன்னேற்றம் தெளிவாக உள்ளது, ஆனால் இன்னும் நிறைய ஆற்ற வேண்டியுள்ளது. நாம் நம் முயற்சிகளை விரைவாக்குவோம்’ என்பதே இவ்வாண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின், உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தின தொனிப்பொருளாகும்.
சிறுவர் தொழிலாளர் இல்லாத உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நாளாக இன்றைய தினம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மாத்திரம் கிட்டத்தட்ட 138 மில்லியன் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டதாக “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” (UNICEF) தெரிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தே வருகின்றபோதிலும், இந்த முயற்சிகள் போதாது என்பதுதான் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.
பாடசாலை செல்ல வேண்டிய வயதுடைய மாணவரை, பாடசாலை செல்ல விடாமல் தடுக்கும் எந்தவொரு வேலையும், சிறுவர் தொழிலாகக் கருதப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் நம் ஒவ்வொருவருக்கும் சிறுவர்கள் கல்வி கற்கவும், சுதந்திரமாக வளரவும் உரிமை உள்ளதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறது.