அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லிண்ட்சே கிளான்சியின் வழக்கு, விசாரணை நடுவர் குழுவினர் ஒருமித்த முடிவுக்கு வர முடியாததால், முடிவடையாத விசாரணை(mistrial) எனப்படும் தீர்ப்பின்றி முடிவடைந்தது. ஏழு நாட்களாக சுமார் 38 மணி நேரம் ஆலோசனை நடத்திய 12 பேர் கொண்ட நடுவர் குழுவில் 11 பேர் ஒரு முடிவை நோக்கி நகர்ந்த நிலையில், ஒரு நடுவர் மட்டும் உடன்பட மறுத்ததாக தற்போது மூன்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளான்சி தனது மூன்று குழந்தைகளான 5 வயது கோரா(Cora), 3 வயது டாசன்(Dawson) மற்றும் 8 மாத கா(k)லன்Callan ஆகியோரை 2023 ஜனவரியில் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். அவர் கொலைகளை செய்ததை மறுக்கவில்லை என்றாலும், அப்போது பிரசவத்திற்குப் பிந்தைய கடுமையான மனநோய் (postpartum psychosis) காரணமாக குற்றப்பொறுப்பு ஏற்க முடியாத நிலையில் இருந்ததாக அவரது தரப்பு வாதிட்டது.
நடுவர் குழுவின் தலைவரான ரோனி கார்ல்சன்(Roni Carlson) உள்ளிட்ட மூன்று நடுவர்கள், தங்களுடன் இருந்த ஒரு ஆண் நடுவர் “நியாயமான சந்தேகம்(reasonable doubt)” இருப்பதாக ஒப்புக்கொண்ட போதிலும், கிளான்சியை மனநலக் காரணங்களால் குற்றமற்றவர் என அறிவிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளனர். நீதிபதி பலமுறை சட்ட விளக்கங்களை வழங்கியும், நடுவர்களை மீண்டும் ஆலோசிக்கச் செய்தும் ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை.
சில நடுவர்கள் அந்த நபரின் அணுகுமுறை ஒத்துழைக்காததாகவும், விவாதங்களில் ஈடுபட விரும்பாததாகவும் இருந்ததாகக் கூறினர். இதனால் ஆலோசனைகள் கடுமையான உணர்ச்சிப் பதற்றமாக மாறியதாகவும், சில தருணங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், நடுவர் குழு தொடர்ந்து முடங்கிய நிலையில் இருந்ததால் நீதிபதி வில்லியம் சல்லிவன்(William Sullivan) செப்டம்பர் 4 அன்று முடிவடையாத விசாரணை(mistrial) அறிவித்தார். இதன் பொருள் கிளான்சி குற்றவாளி என்றும் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதாகும்.
வழக்கு மீண்டும் நடைபெறுமா?
வழக்கை மீண்டும் நடத்துவது குறித்து அரசு தரப்பு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. செப்டம்பர் 29, 2026 அன்று அடுத்த நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. புதிய விசாரணை நடத்தப்பட்டால், கிளான்சியின் மனநிலை மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மனப்பிறழ்வு(postpartum psychosis) குறித்த மருத்துவ ஆதாரங்கள் மீண்டும் முக்கியப் பங்காற்றும்.
இந்த வழக்கு, ஒரு தாயின் கடுமையான மனநலப் பிரச்சினை மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த கேள்விகளையும் அமெரிக்காவில் மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது.











