இயற்கையை பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பசுமையான பூமியை தக்க வைத்துக் கொண்டு இயற்கையைப் பேணிப்பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
கால நிலைமாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சவால்களுக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்கும் வகையில் சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டத்துடன் இணைந்ததாக மரம் நாட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பூமரத்தடிச்சேனை கிங் ஸ்டார் விளையாட்டு கழகம், பூநகர் நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் ஆகியவற்றிலுள்ள இளைஞர்கள் இணைந்து வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பூமரத்தடிச்சேனை தொடக்கம் பூநகர் வரையான வாய்க்கால் மருங்குகள் நெடுகிலும் நீண்டகாலப் பயன்தரும் மரங்களை நாட்டடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே இச்செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் மொத்தம் 20ஆயிரம் மரங்களை நாட்டும் திட்டத்தின் கீழ் காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தென்னை, தேக்கு, இலுப்பை, புங்கை உள்ளிட்ட நீண்ட காலப் பயன்தரும் பல் வகை மரங்களும் மா, பலா உள்ளிட்ட கனி வர்க்க மரங்களும் நாட்டப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமுலாகிறது. சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று திலீப்குமார் மேலும் தெரிவித்தார்.
இந்த மரம் நாட்டும் வேலைத் திட்டம் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் நஞ்சுள்ள உணவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட நிருமாணங்கள்,; பல்வேறுபட்ட அபிவிருத்திகள் போன்ற இன்னும் பல வகையான மனிதத் தேவைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கைச் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இத்தகைய ஆபத்தான சுற்றுச்சூழல் பாதிப்பைக் கவனத்தில் எடுத்து அழிக்கப்படும் மரங்களுக்கப் பதிலாக பதிலீட்டு மரம் நாட்டும் வேலைத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்