இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையொப்பமிடப்பட்ட இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வருவது ஒரு சிறப்பு அம்சமாகும்.
இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தையொட்டி கொழும்பு நகரைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில், பின்வரும் நேரங்களில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன:
செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் 1.30 மணி : பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமைச்சர் தங்கவுள்ள ஹோட்டல் வரையிலான பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
செவ்வாய்க்கிழமை (8) இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை : ஹோட்டலில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரையிலும், மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பும் பாதையிலும் கட்டுப்பாடுகள்.
புதன்கிழமை (9) காலை 9.50 மணி முதல் 11.25 மணி வரை : ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும், மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பும் பாதையிலும் கட்டுப்பாடுகள்.
புதன்கிழமை (9) பிற்பகல் 2.00 மணி முதல் : அமைச்சரின் திட்டமிடப்பட்ட பயணங்களுக்காக மேலதிக போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
புதன்கிழமை (9) இரவு 7.00 மணி முதல் 7.10 மணி வரை : திட்டமிடப்பட்ட பயணத்திற்காக ஹோட்டலில் இருந்து செல்லும் பாதையில் கட்டுப்பாடுகள்.
வியாழக்கிழமை (10) காலை 9.00 மணி முதல் 9.10 மணி வரை : அமைச்சரின் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
வாகனத் தொடரணியின் பயணத்திற்கு ஏற்ப இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் இடையிடையே அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட வீதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










