அல்-கொய்தாவின் 9/11 தாக்குதல்களுக்கு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஐரோப்பாவில் இணையத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் புதிய வகையான வன்முறை தீவிரவாதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நிஹிலிஸ்டிக் வையலன்ட் எக்ஸ்ட்ரீமிசம்”(Nihilistic violent extremism) என அழைக்கப்படும் இந்தப் புதிய போக்கு, குறிப்பிட்ட அரசியல் அல்லது மதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, வன்முறையின் மீதான ஈர்ப்பு, இணையப் புகழ் மற்றும் அந்த இணையக் குழுக்களில் அந்தஸ்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் ஆகியவை இளைஞர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பார்ட்ஜன் வெக்டர் தெரிவித்துள்ளார்.
ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, “தி காம்”(The COM) என அடையாளப்படுத்தப்பட்ட ஓர் இணையச் சமூகத்துடன் தொடர்புடைய சுமார் 4,340 இணைய முகவரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய இணைய வலையமைப்புகள் இளைஞர்களை நிஜ வாழ்க்கையில் கத்திக்குத்து உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2025ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 10 நாடுகளில் 45 பயங்கரவாதத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 24 தாக்குதல்கள் ஜிஹாதிய குழுக்களுடன் தொடர்புடையவை. அதே ஆண்டில் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றச்சாட்டில் 486 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் சுமார் மூன்றில் ஒருவர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள்.
அதிகாரிகள் மேலும் கூறுகையில், புதிய இணையத் தீவிரவாத அச்சுறுத்தலைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது. காரணம், இதில் ஈடுபடுவோர் பெரும்பாலும் முன்குற்றப் பதிவுகள் இல்லாத இளைஞர்களாக இருப்பதுடன், மறைகுறியாக்கப்பட்ட இணையத் தளங்கள் மற்றும் சமூகங்களின் பின்னால் செயல்படுகின்றனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் தீவிரவாதப் பிரசாரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.










