இலங்கையின் முதல் பெண் நிரந்தர பிரதிநிதியாக ஐக்கிய நாடுகளின் ஆப்பிரிக்காவுக்கான பொருளாதார ஆணையத்தில் (UNECA) நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் நிர்மலா இந்துமதீ டயஸ் பரணவிதான, ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
UNECA நிறைவேற்றுச் செயலாளர் கிளாவர் கட்டேட்டேவை சந்தித்த அவர், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், அறிவுப் பகிர்வு மற்றும் தனியார் துறை கூட்டாண்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், புருண்டியில் அரிசி உற்பத்தி அறிவுப் பரிமாற்றம், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் மரவள்ளிக்கிழங்கு மதிப்புக் கூட்டல், கமரூனில் மின்சாரத் துறை ஒத்துழைப்பு, எத்தியோப்பியாவில் இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் திறன் மேம்பாடு, சோமாலியாவில் மீன்பிடி மற்றும் கடல்சார் பாதுகாப்பு, ஜிபூட்டியில் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக சேவைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் மூலம் இலங்கையின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தனியார் துறை திறன்களை ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைத்து, வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகால பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது இலங்கையின் நோக்கமாக உள்ளது.










