ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்கள்!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இதன் கீழ் அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கான பிரிவுகள் மற்றும் தகுதிகள்:

1. அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் (வர்த்தமானி இலக்கம் 2474/18)

10.02.2023 அன்றைய திகதியில் அரச சேவையில் நியமனம் பெற்று, தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.

10.02.2023 அன்று 45 வயதிற்கு மிகாதவராகவும், அன்றைய திகதியில் பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.

2. ஏனைய பட்டதாரிகள் (வர்த்தமானி இலக்கம் 2474/19)

இந்த வர்த்தமானியின் கீழ் பின்வரும் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

10.02.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்ட, அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள்.

10.02.2023 இற்குப் பின்னர் அரச சேவையில் இணைந்து தற்போது பணியில் உள்ள, அன்றைய திகதியில் 40 வயதிற்கு உட்பட்ட உத்தியோகத்தர்கள்.

10.02.2023 அன்று அரச சேவையில் இருந்து பின்னர் முறையாக பதவி விலகிய, அன்றைய திகதியில் 40 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகள்.

10.02.2023 அன்று அரச சேவையில் இருந்தும், அன்றைய திகதிக்கு பின்னர் பட்டப்படிப்பு தகுதிகளைப் பெற்றுக்கொண்ட 40 வயதிற்கு உட்பட்ட உத்தியோகத்தர்கள்.

முக்கிய குறிப்பு:

27.01.2023 திகதியிட்ட (இலக்கம் 2317) வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஏற்கனவே விண்ணப்பித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

எனினும், அவர்களின் தொலைபேசி இலக்கம், முகவரி அல்லது அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தள இணைப்புகள் (Links) ஊடாக அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பாக ஏதேனும் வினவல்கள் இருப்பின், வேலை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்களம்: 0112-784819 / 0112-785634 / 1988

தமிழ்: 0112-785634

ஆங்கிலம்: 0112-785258 / 0112-784819 / 0112-787399