அடுத்து வரும் புயலின் பெயர் “மொக்கா”

அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மொக்கா (Cyclone Mocha) என்று பெயர் வைக்க உள்ளார்கள். ஏமன் நாட்டு மொழியில் இந்த பெயர் அழைக்கப்படவுள்ளது.

இலங்கை , இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உருவாகும் புயலுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகின்றது என்பது பற்றி பலருக்கு தெரியவாய்ப்பில்லை.

வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இலங்கை, இந்தியா, வங்கதேசம், ஏமன், கத்தார் உள்பட 13 நாடுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்த ஒவ்வொரு நாடுகளும் ஆண்டுக்கு 13 பெயர்களை பரிந்துரைக்கும்.

இந்த வகையில் ஆண்டுக்கு 169 பெயர்கள் புயல்களுக்கு சூட்டுவதற்காக பட்டியலிடப்பட்டிருக்கும். வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இலங்கை, வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய நாடுகள் ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த சிலதினங்களுக்கு முன்னர் மாண்டஸ் புயல் இலங்கை , இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ள நிலையில் இந்தப் பெயரை ஐக்கிய அரபு அமீரக நாடு பரிந்துரைத்திருந்தது, அந்நாட்டு மொழியில் “மாண்டஸ்” என்பதற்கு புதையல் பெட்டி என்று பொருளாம்.

அடுத்து உருவாகும் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள”மொக்கா” என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரத்திற்கு மொக்கா என்று பெயர் உள்ளது.

இதற்கு பின்னர் வரும் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்துள்ள “பிபர்ஜார்” என்று பெயர் சூட்டப்படவுள்ளது. இதற்கு வங்க மொழியில் பேரழிவு என்று அர்த்தமாம்.