விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் இ.போ.ச பேருந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மஞ்சள் கோட்டை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் திருகோணமலை சர்தாபுரம்- ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஏ.வசந்த (36வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மஞ்சள் கோட்டினால் வீதியை கடக்க முற்பட்ட போது, விபத்து இடம்பெற்றதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்