வாயைச் சுற்றியுள்ள கருமை நீங்குவதற்கு!

சருமத்தின் நிறம் சீராக இருந்தால் தான், அது நல்ல அழகான தோற்றத்தைத் தரும். ஆனால் சில பெண்களுக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி சற்று கருமையாக இருக்கும். இப்படி கருமையாக இருப்பது சில சமயங்களில் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

ஏனெனில் இது மீசை வளர்வது போன்ற தோற்றத்தைத் தரும். பொதுவாக இப்படி வாயைச் சுற்றியுள்ள பகுதி கருமையைக இருக்க சூரியக் கதிர்கள், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது அதிகப்படியான காப்ஃபைன் நிறைந்த பானங்களைக் குடிப்பது போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

வாயைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க பலர் வேக்சிங் அல்லது த்ரெட்டிங் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில் அவை சருமத்தை மோசமாக பாதிக்கக்கூடும். அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுத்தால், கருமை நீங்குவதோடு, சருமமும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் ஏராளமான அழகு நன்மைகளைக் கொண்டது. அதனால் தான், இது பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதுவும் வாயைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் நேரடியாக தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்க்கு சரும கருமையைப் போக்கும் திறன் உள்ளது. அதற்கு வெள்ளரிக்காயை எடுத்து, அதன் ஒரு துண்டை கருமையாக உள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும கருமை நீங்கும்.

அரிசி

அரிசியை கொஞ்சும் எடுத்து, அதை மிகவும் மென்மையாக அரைக்காமல், சற்று கொரகொரவென்று அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த அரிசி பொடியுடன் பால் சேர்த்து கலந்து, அதை வாயைச் சுற்றி கருமையாக உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவல்லது. அதுவும் உங்கள் வாயைச் சுற்றி கருப்பாக இருந்தால், அப்பகுதியில் எலுமிச்சை சாற்றினைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கடலை மா மற்றும் எலுமிச்சை

வாயைச் சுற்றி கருமையான சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதை வாயைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கடலை மா மற்றும் தயிர்

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அப்படிப்பட்ட தயிரை 1 ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து, பின் அதை வாயைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களுமே சரும நிறத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் பொருட்களாகும். உங்கள் முகம் அல்லது உங்கள் வாயைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாக இருந்தால், 2 ஸ்பூன் தேனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தக்காளி சாறு

தக்காளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது. எனவே தக்காளியை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தை பொலிவடையச் செய்கிறது. அதற்கு தக்காளி சாற்றினை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள்

உங்கள் வாயைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் கருப்பாக இருந்தால், ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் , எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்