மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வட்டமடு பகுதியில் மரத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா- சூரங்கல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஷாகுல் ஹமீட் அலி இப்னு  (49வயது) எனவும் தெரிய வருகின்றது.

வீட்டிலிருந்து தனது தந்தையின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் புளியம்பழம் ஆய்வதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து விழுந்த நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி சுபைர் ஷாபி குறித்த மரணம் தொடர்பில் சரியான தகவல் பெற்றுக் கொள்ள இயலாத நிலையில் பிரேத பரிசோதனையை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் கிண்ணியா பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதனை அடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதாகவும்,  முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார், தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்