பராமரிப்பாளரை கொலை செய்த மனநல சிகிச்சையிலிருந்து தப்பியோடிய இளைஞர்

யாழ். சாவகச்சேரி  மீசாலை – புத்தூர் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 அளவில் நபரொருவர் கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமது வீட்டுக்கு தப்பியோடியுள்ளார்.

இந்தநிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவரும் இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றுள்ளனர்.

அதன்போது, ரயில் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞருடன் பராமரிப்பாளர் உரையாடியதோடு  அவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதேவேளை, இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.

வீட்டுக்குள் சென்ற குறித்த இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் ரயில் கடவையில் சென்று அமர்ந்துள்ளார்.

பராமரிப்பாளரை காணவில்லை என குறித்த இளைஞரிடம் கேட்டபோது தான் அவரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கினால் குத்தி கொலை செய்துவிட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வீட்டு முற்றத்திலிருந்து குறித்த பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்