அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்த தீர்மானம்

இலங்கையில் அரை சொகுசு பேருந்து சேவை எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.

அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக NTC இன் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இயங்குகிறது என்று தெரிவித்த அவர், அரை சொகுசு பேருந்து சேவையை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசுப் பேருந்து சேவையாகவோ மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அரை சொகுசு பேருந்துகளின் உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை சாதாரண பேருந்து அல்லது சொகுசு பேருந்துகளாக மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,  சேவை மாற்றத்திற்காக உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது, இது இலவசமாக செய்யப்படும், என்று நிலான் மிராண்டா தெரிவித்தார்.

தற்போது இயங்கி வரும் 430 அரை சொகுசு பேருந்துகளில், 20 பேருந்துகளின் உரிமையாளர்கள் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் NTC இன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அரை சொகுசு பேருந்துகளை பொது சேவை அல்லது சொகுசு சேவையாக மாற்ற விரும்பும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் எதிர்வரும் மே 31 ஆம் தேதிக்கு முன்னர் தேவையான மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்