பூநகரியில் காணிகள் இல்லாதோருக்கு காணிகள் : அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

 

காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பூநகரி, ஜெயபுரம் பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 472 ஏக்கர் காணிகளே கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், பிரதேசத்தினை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி, காணிகளைப் பெற்றுக் கொள்வோர் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபடுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், அறுவடை செய்யப்படும் விளைச்சலை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்நடவடிக்கை மூலம் பூநகரி, ஜெயபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் நேரடியாக பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொள்ள இருப்பதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரமுந்திரிகை பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான மூலப் பொருட்கள் நியாயமான விலையில் தாராளமாக கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.