ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி
-திருகோணமலை நிருபர்-
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா பவானந்தன் ( வயது 44) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வழமையாக சந்திவெளி ஆற்றில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வழமை போன்று நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் குறித்த சந்திவெளி ஆற்றில் மீன்பிடிக்க சென்று உள்ளார்.
மீன்பிடிக்க சென்றவர் காலை விடிந்த பிற்பாடும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற மீன் வியாபாரி ஆற்றில் மீன்பிடி தோனி மாத்திரம் மிதந்து கொண்டிருப்பதை அவதானித்ததை அடுத்து தேடிச் சென்று பார்த்தபோது ஆற்றுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணியிலிருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம், என திடீர் மரண விசாரி அதிகாரியிடம் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்